பாவலர் இறையரசனார் நூல்கள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைப்பு – 2022

தந்தையார் பாவலர் இறையரசனார் மறைவின் பின்னர் சிங்கை திரும்பும் முன், அவர்தம் நூல்களைச் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்துத்தில் ஆவணக் காப்புத் திட்டத்துக்கு ஒப்படைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம்.

19 செப்டம்பர் 2022 பிற்பகல் அந்த நூலகத்தின் இயக்குநர் திரு.சுந்தர் கணேஷ் அவர்களைச் சந்தித்து நூல்களை ஒப்படைப்பதற்காக நேரம் கேட்டேன். அழைத்தபோது விமானத்தில் இருந்த அவர், சிறிது நேரத்தில் அழைத்துச் சந்திக்க ஒப்புக் கொண்டதில் மன நிறைவு.
நானும் இரட்டையரக என்னுடன் பிறந்த சகோதரி மணிமேகலையும், என் தந்தையார் எலவனூரில் இருந்த காலந்த்தில் பால்ய நண்பராகப் பழகி, சென்னையில் வசித்த அமரர் PSR அவர்களின் மகனும், என் நண்பருமான PSR பாபுவும் அங்குச் சென்றிருந்தோம்.

மிக அரிய நல்ல வாய்ப்பாக, அந்த ஆவணக் காப்புத் திட்டத்தை உருவாக்கி, ஒரு FETNA இணைய நிகழ்விலும், THE RISE LONDON மாநாட்டிலும் அறிவித்தவரான, தமிழ் வரலாற்று ஆய்வாளர், ஒரிசா மாநில முதல்வரின் மதியுரைஞர், மதிப்புக்குரிய ஆர். பாலகிருஷ்ணன் IAS(ஓய்வு) ஐயா அவர்களும் அங்கே இருந்தார்கள். என்னுடன் தொடர்பில் இருப்பவர் என்பதனால்,. தந்தையின் மறைவுச் செய்தியை அறிந்திருந்தார். தனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்கள்.

அருட்தந்தை ஜகத் கஸ்பர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இலண்டன் எழுமின் மாநாட்டில் திரு பாலகிருஷ்ணன் அவர்களை நேரில் சந்தித்து, அவரது மிகவும் புகழ்பெற்ற Journey of Civilisation நூலைப் பெற்றிருந்தேன். (இந்த நூல் தமிழக முதல்வர் அவர்கள் பல விருந்தினர்களுக்கும் தமிழக அடையாளமாகப் பரிசளிக்கும் தகுதி வாய்ந்தது).

அந்த நூலகத்தில், ஏற்கெனவே தந்தையாரின் நான்கு நூல்கள் இருந்ததை திரு. சுந்தர் கணேஷ் அவர்கள், தேடி எடுத்து வைத்திருந்தார்கள். அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவற்றில் பெரும்பாலான நூல்களுக்கு எங்களிடமே நகல் இல்லாத நிலை. அந்த நூல்கள் வழி அப்பாவைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். 😢

ஆர். பாலகிருஷ்ணன் ஐயா. “உங்கள் தந்தையார் தமிழுக்காக இலக்கியத்துறையில் கடின உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இப்போதுதான் புரிகிறது உங்களது தமிழார்வம் எங்கிருந்து வந்தது என்று” எனக் கூறினார்கள்.

சிங்கப்பூர் திரும்பும் அவசரத்தில் வேறு சில முக்கியமான பணிகளும் இருந்ததால், நேரக் குறைவால் அந்த நூலகத்தைப் பார்க்கும் ஆவலை ஒத்தி வைத்து, அவர்களோடு அதிக நேரம் உரையாட இயலாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்து, திரு சுந்தர் கணேஷ் அவர்களுக்கும், பாலகிருஷ்ணன் IAS அவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றோம்.

தந்தையாரின் நூல்களை ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்த சிறு மன நிம்மதியோடு 20-செப்டம்பர்-2022 காலை சிங்கை வந்து சேர்ந்தேன்.
⦁ இறை.மதியழகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *