இறையரசன் கவிதை : விடியல்

 இறையரசன் கவிதை : விடியல்   தமிழ்மொழியில் பிறமொழிச்சொல் களைய வேண்டும்! தனித்தமிழே தமிழ்நாட்டில் தழைக்க வேண்டும்! தமிழ்மொழியின் உயர்வொன்றே தம்மின் தனிவாழ்வின் வித்தென்று புரிய வேண்டும்! தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பணிகள் ஆற்றும் தமிழ்மகனே தமிழ்மாந்தன்! இந்தி வந்தால் தமிழ்கெடுமோ? என்பவனோர் சோற்று முண்டம்! தமிழுக்கு வரும்விடியல் இனத்திற் காகும்!   உழைப்பதற்குத் தயங்காமல் கையு யர்த்தல் உயர்வுக்கு முதல்விடியல்! பெருமை யெல்லாம் தழைப்பதற்கு நற்குணமே விடியல்! என்றும் தன்னலத்தை மறந்துழைத்தல் பொதுமை இங்கே முளைப்பதற்கு நல்விடியல்! கல்வி ஒன்றே முகிழ்க்கின்ற பேரறிவின் விடியல், நமை விளைப்பதற்கு நல்லெண்ணம் விடியல்! துன்பம் விலக்குதற்குத் துணிவொன்றே விடிய லாகும்.  

Continue Reading

இறையரசன் கவிதை : முதல் கடமை

   இறையரசன் கவிதை : முதல் கடமை   சொத்தில் களித்தே சிலர்வாழ சோறும் இன்றிப் பலர்வாட முத்தும் மணியும் சிலர்அணிய மூடும் துணிக்கே பலர்அலைய கொத்தளம் கோட்டையில் சிலர்வாழ குடிசையும் இன்றிப் பலர்வாட எத்தனை நாள்தான் பலர்பொறுப்பார்? இவைகளைச் சமன்செயல் முதல்கடமை!   பஞ்சணை பட்டுடன் சிலர்வாழ பாயும் இன்றிப் பலர்வாட எஞ்சும் ரொட்டியை நாய்கொரிக்க எச்சிலைப் பருக்கையைச் சேய்பொருக்க கொஞ்சலும் குலவலும் கோபுரத்தில் குமுறலும் வறுமையும் குடிசையிலே! எஞ்சுமிக் கொடுமையைப் பொறுப்பதுவோ? இவைகளைச் சமன்செயல் முதல்கடமை!   ஆண்டையாய்க் களித்தே சிலர்வாழ அடிமையாய்த் துடித்தே பலர்வாட மீண்டிடாச் சிறப்பில் சிலர்வாழ மீளாத் துயரினில் பலர்வாட தூண்டிலைப் போலே சிலர்வாழ துடிக்கும் மீன்போல் பலர்வாட ஏண்டா மாந்தனே! இதுஅறமோ? இவைகளைச் சமன்செயல் உன் கடமை!

Continue Reading

இறையரசன் கவிதை : பொறுமை

இறையரசன் கவிதை : பொறுமை   வறுமையெனும் தேள்கொட்ட நோயும் தாக்க வாழ்வதற்கே வழியில்லா ஏழையர்க்கும் பொறுமை யெனும் தன்துணையும் இல்லா விட்டால் போய்விடுமே அவர்உயிரும் ஓர்நொ டிக்குள்! சிறுமதியே படைத்தோர்கள் செய்யும் கீழ்மை சீரார்ந்த நற்சான்றோர் பொறுமை இன்றேல் மறுகணமே அவர்உயிர்க்கு வேலாய் மாறும்! மாண்புடையோர் பொறுமையினால் உலகே வாழும்.   அகழ்வாரைத் தாங்குகின்ற நிலத்தாய் போலே அறியாமல் இகழ்வாரைப் பொறுப்பீர் என்று புகழ்வாய்ந்த வள்ளுவனார் புகன்ற வாய்மை பொய்யாகிப் போவதுண்டோ ? பொறுமை தன்னை மிகவாகப் பெற்றவர்கள் தமது வாழ்வில் மேன்மையுறல் நாம்கண்டோம்! அறிவில் ஆன்ற தகவுடையோர் பொறுமையின்றேல், மாந்த வாழ்வு. தடுமாறிக் கெட்டழிதல் திண்ணம் அன்றோ?   (வேறு)   பொறுமையே உலகில் என்றும் பொன்றிடாப் புகழைச் சேர்க்கும்! பொறுமையில் மாந்தன் வாழ்வில் புகலவோர் நலனும் காணான்; பொறுமையால் வெற்றி கண்டோர் புவியினில் நிறைய உண்டே! பொறுமையில் மாந்தர் வாழ்வு பொருளிலா நூல்போல் வீணே!     30-12-72

Continue Reading

இறையரசன் கவிதை : ஒன்றும் இல்லை!

இறையரசன் கவிதை : ஒன்றும் இல்லை!     உழவன் புலர்ந்தவுடன் இரவுவரை மனைவி மக்கள் புடைசூழச் சேற்றினியே முத்தம் இட்டுப் பலபொருளும் விளைவாக்கி, வயிற்றைக் கட்டிப் பாருக்கே உணவுதரும் உழவன் வாழ்வில் நலன்கடுகும் மலர்ந்துளதா? மகிழ்ச்சி உண்டா? நல்லாடை அணிகலன்கள் திருநாள் உண்டா? சிலநாளில் எரிமலைபோல் வெடிப்பான்! அன்று சீர்மிகுந்த அவன்தாளை வணங்கும் ஞாலம்!   தொழிலாளர் செங்கதிரோன் எழுமுன்னே எழுந்தி ருந்து சிலைபோலே மனைவிமக்கள் நினைவை விட்டே தங்களுடல் வினாக்குறிபோல் வளைந்து தோன்ற தம்வயிற்றுக் கரைக்கஞ்சி குடித்துக் கொண்டே செங்குருதி வியர்வையொரு ஆறாய் ஓடச் சிந்தைக்குள் வஞ்சனையே சிறிதும் இன்றி எங்கெங்கும் வளம்பெருக உழைக்கும் தோழர் இல்லத்தில் காண்பதென்ன? ஒன்றும் இல்லை!  

Continue Reading

“இன்பம்” – பாவலர் இறையரசன்

“இன்பம்” – பாவலர் இறையரசன்   அறிவினை வளர்த்தல் இன்பம்! அனைவரும் சமமே என்னும் அறத்தினை மதித்தல் இன்பம்! அன்புடன் பழகல் இன்பம்! திறமொடு வாழ்தல் இன்பம்! தீமையை ஒழித்தல் இன்பம்! குறள்நெறி வாழ்ந்தால் என்றும் குறைவிலா இன்பம்! இன்பம்!   தென்றல் தீண்டல் இன்பம் ! தெம்மாங் கிசைத்தல் இன்பம்! மன்றினில் அறிஞர் கூறும் மாண்புரை கேட்டல் இன்பம்! என்றுமே இளமை குன்றா இன்றமிழ்ப் படித்தல் இன்பம்! பொன்றுமே உயிரென் றாலும் புகழ்வரும் வழியே இன்பம்!   கலைகளைக் காணல் இன்பம்! கவின்பாப் புனைதல் இன்பம்! இலையெனும் வறியோர்க் கொன்றை ஈவதே உயர்ந்த இன்பம்! நிலையிலா வாழ்க்கை தன்னை நேர்மையாய் வாழ்தல் இன்பம்! சிலையாக வாழும் சான்றோர் செவ்வழி நடத்தல் இன்பம்!   நல்லோரைமதித்தல்இன்பம்! நடுநிலைநிற்றல்இன்பம்! பொல்லாரைத்திருத்தல்இன்பம் பொறுமையேமிகவும்இன்பம்! எல்லோரும்ஒன்றாய்க்கூடி ஏற்றமாய்வாழ்வதின்பம்! வல்லூறாய்வாழ்வோர்தம்மை வன்மையாய்ஒறுத்தல்இன்பம்   வள்ளுவன்குறளேஇன்பம்! வையமேஏற்கும்இன்பம்! தெள்ளியதமிழ்ப்பாஇன்பம்! தென்தமிழ்க்கலைதான்இன்பம்! ஒள்ளியஅறிவேஇன்பம்! உயர்வானபண்பேஇன்பம்! வள்ளலாய்வாழ்வதின்பம் வையமேவாழ்த்தும்இன்பம்!   குழலொடுயாழும்இன்பம்! கொள்கையேதூயஇன்பம்! மழலையின்சொற்கள்இன்பம் மகிழ்ந்துடல்தீண்டல்இன்பம் விழிவேல்வஞ்சிஇன்பம் விளம்பொணாஇனியஇன்பம் வழுவிலாவழியில்சென்றால் வாழ்வினில்என்றும்இன்பம்!   30-1-84 திருச்சி’வானொலி’இலக்கியஏடு

Continue Reading