சி.சாமிநாதன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் 20 நவம்பர் 1943 அன்று கருவூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் சூ.தொட்டம்பட்டி என்னும் சிற்றூரில் சிவன்மலை-பொன்னம்மாள் இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார். தனித்தமிழ்ப் பற்றின் காரணமாக இறையரசன் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார். திண்ணைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரையிலுமே முறையான கல்வி கற்றார்.
தனது 17-ஆவது வயதில் எலவனூர் என்னும் சிற்றூரில் தையற்கலைஞராகப் பயிற்சி பெற்ற போதே, நண்பர் இராமசாமி அன்பளிப்பாகக் கொடுத்த திருக்குறள் நூலை வாசித்து அதன்பால் ஈர்க்கப்பட்டு முழுதும் கற்று 1330 குறள்களையும் மனப்பாடமாகக் கூறும் திறனை வளர்த்துக் கொண்டது, இவர் வாழ்க்கையை இலக்கியத்தை நோக்கியும் அரசியலை நோக்கியும் மாற்றியது.
1963-இல் திரு.பரமத்தி சண்முகம் அவர்கள் தலைமையில் இவருடைய திருமணம் நடந்தது. துணைவியார் பெயர் பொன்னாச்சி. 1969-ஆண்டு இரட்டையர்களாகப் பிறந்த இவருடைய மகன் மதியழகன் மகள் மணிமேகலை இருவருக்கும் சின்னதாராபுரம் வந்திருந்த அன்றைய அமைச்சர் மறைந்த சத்தியவாணி முத்து அம்மையார் அப்பெயர்களைச் சூட்டினார்.
தொழில்
சின்னதாராபுரத்தில் தான் தொடங்கிய துணி வணிக நிறுவனத்துக்கு “மனோகரன் ஆடை அங்காடி” என்று தனித் தமிழில் பெயரிட்டு, சுமார் 50 ஆண்டு காலம் அத்தொழிலை நடத்தி, அந்த வட்டார மக்களின் நன் மதிப்பைப் பெற்றுத் திகழ்ந்தார். உள்ளூரில் குறுநிதி நிறுவனங்கள், கரூரில் சிறு கைத்தறி உற்பத்தி நிறுவனம், கிராம மக்களுக்கும் பயனளிக்கும் வண்ணம் சிறு பேருந்துகள் இயக்குதல் ஆகிய தொழில் முயற்சிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு தொழில் துறையில் தடம் பதித்தார்..
கழகப்பணிகள்
1957-இல் இருந்து தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றுகின்றார். 1957 தேர்தலில் லப்பைக்குடி ஏ.கே.சமாலி என்பவர் அரவக்குறிச்சித் தொகுதியில் கழக ஆதரவோடு போட்டியிட்டார். அவருக்குப் பணியாற்றியதில் தொடங்கி இதுவரை தொகுதித் தேர்தலில் முக்கியப் பொறுப்புகளில் 10க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தேர்களிலும், அதே அளவு நாடாளுமன்றத் தேர்தலிலும் முன்னின்று பணியாற்றி தி.மு.கழகத்தினர் மத்தியில் மதிப்பையும் நற்பெயரையும் பெற்றிருக்கிறார்.
கரூர் மாவட்டத்தில் அதிக நிதி வசூல் செய்ததற்காக இரண்டு முறை தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள், இவருக்கு ‘கணையாழி” அணிவித்துப் பாராட்டி இருக்கிறார்கள்.
கழகப் பொறுப்புகள்
- 1962 முதல் 69 வரை சின்னதாராபுரம் தி.மு.க. துணைச் செயலாளராகவும்
- 1969 முதல் 93 வரை 24 ஆண்டுகள் சின்னதாராபுரம் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- வட்டக் கழகம் மாற்றப்பட்டு ஒன்றியக் கழகம் அமைந்ததிலிருந்து கரூர் பரமத்தி ஒன்றியத்தின் துணைச் செயலாளராக மூன்று முறை பொறுப்பு வகித்துள்ளார்.
- 1993 முதல் 97 வரை கரூர் பரமத்தி ஒன்றியத் தி.மு.க பொறுப்பாளராகவும்
- 97 முதல் 2000 வரை ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
- 2000-ஆம் ஆண்டு முதல் கரூர் மாவட்த்தின் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளராகப் 15 ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்..
சிறை சென்ற விபரம்
- 1977 இல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள் இந்திராகாந்தி அம்மையாருக்குக் கருப்புக்கொடி காட்டியதற்காகக் கைது செய்யப்பட்டபோது, பேருந்து மறியல் செய்து முதன் முதலில் சிறை சென்றார்.
- 30-06-2001-இல் தலைவர் அவர்கள் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட போது, பேருந்து மறியல் செய்து 35 பேருடன் சிறை சென்றார்.
- இடைப்பட்ட கால கட்டத்தில் தி.மு.கழகம் அறிவித்த போராட்டங்களை முன்னின்று நடத்தி 9 முறை சிறை சென்றுள்ளார்.
இலக்கியப் பணிகள்
இவர் 1330 திருக்குறளுக்கும், 2 அடிக் குறளுக்கு 4 அடிகளில் பாடல் வடிவத்தில் உரை எழுதி உருவாக்கிய “குறளும் பொருளும்” என்ற திருக்குறள் நூலை, திருச்சியில் 6-10-1982 ஆம் ஆண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிட்டுப் பாராட்டுரை வழங்கினார்..
அந்த உரையில் கலைஞர் அவர்கள், “சில குறள்களுக்கு மட்டும் குறளோவியம் எழுதிக் கொண்டிருக்கும் நான், 1330 குறள்களுக்கும் உரை எழுதுவேன். அப்படி எழுதும் போது, சில அறிஞர்களின் நூல்களை வாசிப்பேன். அந்த நூல்களின் பட்டியலில், இறையரசன் எழுதியிருக்கும் ‘குறளும் பொருளும்’ என்ற இந்த நூலும் இருக்கும். அந்த வகையில், என் தம்பி எனக்கு வழிகாட்டி என்பதில் எனக்குப் பெருமை” என்று பாராட்டி வழங்கிய உரை அடுத்த நாளில் முரசொலியில் முழுப்பக்கம் உரையாக வெளிவந்தது.
பின்னர் அதே வரிசையில் “நாலடியார்” நூலின் 4 அடிகளில் இருக்கும் 400 பாடல்களுக்கு 8 அடிகளில் பாடல் வடிவ உரை எழுதி, “ நாலும் பொருளும்’ என்ற நூலாகப் படைத்தார். அந்த நூலை குளித்தலை மி.சு இளமுருகு பொற்செல்வி, மதுரை இளங்குமரனார், ஈரோடு இரட்டைப் பாவலர் ஈவப்பனார் ஆகியோர் 14 ஜூன் 1992 அன்று கலந்து கொண்ட நிகழ்வில், சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள் வெளியிட்டுச் சிறப்பித்து வாழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து, சிலப்பதிகாரத்தின் ‘புகார்க் காண்டம்” முழுவதற்கும் “சிலம்பும் பொருளும்” என்று பாவடிவ உரை நூலாகப் படைத்தார். அதை, இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கரூர் நகரில் நடந்த நிகழ்வில் வெளியிட்டு வாழ்த்தினார்கள். பின்னர் ‘மதுரைக் காண்டத்துக்கும் பாடல் வடிவ உரை நூல் படைத்து வெளியிட்டு, பாவலர் இறையரசன் தன்னை ஒரு “பாட்டுரைப் பாவலராக” நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்.
“நீதி கேட்ட நெடிய பயணம்” நூல் உட்பட 25-க்கும் மேற்பட்ட தொகுப்பு நூல்களில் கவிதைகள் எழுதியுள்ளார். முரசொலி, தமிழாலயம், கவிக்கொண்டல் உட்படப் பல முன்னணி இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.
படைப்புகள்
1. குறளும் பொருளும்
2. சிந்தனை ஊற்று
3. நாலும் பொருளும்
4. மூன்று தமிழ்க்களம்
5. கொள்கை முரசம்
6. பாண்டியனார் பாவியம்
7. பம்பாய் இலக்கிய உலா
8. சிலம்பும் பொருளும் – புகார்க் காண்டம்
9. சிந்தனை முழக்கம்
10. செந்நீரில் மலரும் செந்தமிழ் ஈழம்
11 . சிலம்பும் பொருளும் – மதுரைக் காண்டம்
12. தமிழினத் தலைவர் கலைஞர்
13. இனமான ஏந்தல் காவியம்
14. குறட்பா அந்தாதி
ஆகியன இவர் இயற்றிய நூல்கள்.
பெற்ற விருதுகள்
- உலகத் தமிழ்க் கவிஞர்கள் பேரவையின் கிருட்டிணகிரி மாநாட்டில் தலைவர் கலைஞர் அவர்கள் கலந்து கொண்டு இவருக்கு “கவிமாமணி” விருது வழங்கினார்கள்.
- ஈரோடு தமிழ்ச்சங்கம் “இன்கவி ஏறு” விருதும்,
- “சேலம் சங்கொலி” விழாவில் “உரையப்பா ஊற்று” விருதும்,
- உலக திருக்குறள் மையம் “திருக்குறள் விருதும்”,
- ஈரோடு குறளாயம் வேலா அறக்கட்டளை “திருக்குறள் மணி” விருதும்
- உலக திருக்குறள் உயராய்வு மையம் “குறள் படைப்புச் செம்மல்” விருதும் இவருக்கு வழங்கியுள்ளன.
- 1996-ல் அமெரிக்கக் கலிபோர்னியா “உலகக் கலை இலக்கியப் பண்பாட்டுக் கழகம்” இவருக்கு “இலக்கிய முனைவர்” (டி.லிட்.,) என்ற பட்டம் வழங்கியுள்ளது.
- 2000-ஆம் ஆண்டு, அமெரிக்க சிகாகோ “உலகத்தமிழ் மொழி அறக்கட்டளை” இவரின் திருக்குறள் தொண்டுகளைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியுள்ளது.
- அனைத்து விருகளுக்கும் முத்தாய்ப்பாக தி.மு.கழகம் 2001-ஆம் அண்ண்டு 15-செப்டம்பர் அன்று ஆண்டுதோறும் நடத்தும் முப்பெரும் விழாவில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் “பாவேந்தர் விருது” வழங்கிச் சிறப்பித்தார்கள். அந்த விருது தொடங்கப்பட்ட பின் விருதைப் பெறும் இரண்டாமவர் என்பது இவரது இலக்கியப் பங்களிப்புக்கான மிகப் பெரிய அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.
கல்விப் பணிகள்
இறையரசன் அவர்கள் தான் வாழும் பகுதியில் அன்னபாக்கியம்–ஜெயராஜ் தொழில் நுட்ப கல்வி நிறுவனம்(ஐ.டி.ஐ) உருவாக முன்னின்று அந்த வட்டார நிலக்கிழார்களை அணுகி 40 ஏக்கர் நிலத்தைப் பெற்றுத் தந்தார். தனது சமுதாயத்தின் முக்கிய முன்னோடிகளோடு இணைந்து அந்த நிறுவனத்தைக் கட்டி எழுப்பினார்.
அவரும் அவரது அண்ணன் திரு முத்துசாமி அவர்களும் அந்த நிறுவனத்தின் செயலாளர்களாக 25 ஆண்டு காலம் அந்தக் கல்வி நிறுவனத்தை நிர்வகித்து, அதே வளாகத்தில் ‘விமலா செல்லதுரை தொழில் நுட்பக் கல்லூரி” (பாலிடெக்னிக்) உருவாகவும் முன்னின்று உழைத்து கல்விப் பணியிலும் தடம் பதித்து இருக்கிறார்கள்.
பங்களித்த பிற அமைப்புகள்
அரசியல் பணிகளோடு
- குளித்தலை தமிழ்க் கா.சு.இலக்கியக் குழுவின் அறக்கட்டளை உறுப்பினராகவும்,
- கருவூர்த் தமிழ்ச் சங்கப் பொருளாளராகவும்,
- ஈரோடு “குறளாயம்” அமைப்பின் ஆட்சிக் குழு உறுப்பினராகவும்,
- கருர் திரு.வி.க. மன்ற மேலாண்மை உறுப்பினராகவும்,
- சின்னதாராபுரம் நூலகம் மற்றும் பள்ளிகளில் புரவலராகவும்
பல பொது அமைப்புகளிலும் பங்குபெற்றுப் பணியாற்றி இருக்கிறார்.
அரசியல் நிகழ்வுகள் தவிர உள்ளூர்த் திருமணங்களில் வாழ்த்துரைகள், பட்டிமண்டப உரைகள், கவியரங்கங்களில் பங்களிப்பு என இலக்கிய உரை வழங்குவதில் தன்னை நிலை நிறுத்திச் சிறப்பானதொரு பங்களிப்பை வழங்கியிருக்கிறார். பம்பாய் நகருக்கும், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்கும் சுற்றுப் பயணம் செய்த போது அங்குள்ள இலக்கிய அமைப்புகளில் உரை நிகழ்த்தியிருக்கிறார்.
2018 முதல் உடல் நலம் நலிந்து வெளி நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் இருந்தாலும், தனது வாழ்க்கை வரலாற்றை பல பாகங்களாக தனது கைப்பட நூலாக்கும் வண்ணம் எழுதியிருக்கிறார். அவை விரைவில் தன் வரலாற்று நூலாக வெளிவரும் போது இவரின் அரசியல், இலக்கிய, சமூகப் பணிகளின் மாண்புகள் வெளிப்பட்டு, இனி வரும் தமிழ்ச் சமுதாயத்துக்கு ஊக்கம் அளித்து வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை.
இவர் பணிகளை அருகிலிருந்து பார்த்து அதில் ஊக்கம் பெற்ற இவரது மகன் பொறியாளர் தொழில் முனைவர் கவிஞர் இறை.மதியழகன் சிங்கப்பூரில் ‘சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்’ அமைப்பில் முக்கியப் பங்களித்து வருவதும், “கவிமாலை சிங்கப்பூர்” என்ற கவிதை அமைப்பின் தலைவராகச் சில ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றிப் பங்களித்திருப்பதும், ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவை, உலகளாவிய எழுமின் நிறுவனம், கோவைத் தொழில் நுட்பக் கல்லூரியின் உலகளாவிய முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றில் முக்கியப் பணியாற்றி, தந்தையின் பாதையில் பயணித்துச் சமுதாயப் பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.