தமிழ் வாழ்த்து – 1
உலகமெலாம் ஊமையாய்க் கிடந்த ஞான்றே
உம்என்றும் இம்என்றும் ஆஊ என்றும்
ஒலியாகி முறையான சொல்லாய் மாறி
உணருவதைப் பிறர்க்குணர்த்தும் கருவி யாகி
இலகுதமிழ் எனும்மொழியாய் வளர்ச்சி யுற்றே
இணையில்லா இலக்கணத்தின் அரணும் பெற்று
வலிவோடு வாழ்கின்ற தாயே, உன்றன்
வளமுணராப் பெரும்பேதை வணக்கம் ஏற்பாய்!
இளமைமிகு செந்தமிழே! இனிக்கும் தேனே!!
எம்மொழிக்கும் மேலாக உயர்ந்த வானே!
வளமைமிகு சொற்செல்வம் பெற்ற தாயே!
வையத்தில் முதல்வியென வந்தாய் நீயே!
உளங்களிக்கும் உணர்வொளியே! வாடாப் பூவே!!
உன்பெருமை தான்பேசும் என்றன் நாவே!
களப்பட்டுச் சாம்போதும் கனியே உன்னைக்
கடைசி முறை நாவாழ்த்தி அடங்கும் பின்னே.
பாவலர் சி.இறையரசன்
சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்
தமிழ் வாழ்த்து – 2
அறமாகிப் பொருளாகி அனைத்துயிர்க்கும் இன்பீனும்
குறளாகி ஒளிவிளக்குக் குன்றாகிச் செந்தமிழர்
மறமாகி வெற்றிதரும் மாண்பாகி உலகினர்க்கே
திறமாகி உரமாகித் தித்திக்கும் அமிழ்தாகித்
தேன்சுவையாய்த் திகட்டாத தென்பாங்குப் பாட்டிசையாய்
வான்மழையாய் விளைபயிராய் வாய்த்தசுவைக் கரும்பாய்க்
காவியமாய் இலக்கணமாய்க் காலத்தின் பெருவைப்பாய்
ஓவியமாய் உயர்கலையாய் உயிர்பெற்ற சிலைஎழிலாய்த்
தென்றலாய் இன்பமாய்த் தீம்பாகாய்க் கற்கண்டாய்
அன்றலர்ந்த நறுமலராய் அகம்புறமாய்ப் பரணியாய்த்
தென்னை இளநீராய்த் தீஞ்சுவையின் முப்பழமாய்
அன்னை தரும்பாலாய் அருவிதரும் மென்னலமாய்ச்
சிந்தா மணியாய்ச் சிலம்பொலியாய்ச் செம்பொன்னாய்
நந்தாச் சுடர்விளக்காய் நாலடியாய் மேகலையாய்
விருந்து படைப்பவளே வென்றாளும் திருமகளே
இருப்பாய்நீ என்னுள் எழுந்து!
பாவலர் சி.இறையரசன்
சின்னதாராபுரம், கரூர் மாவட்டம்