இறையரசன் கவிதை : ஒன்றும் இல்லை!
உழவன்
புலர்ந்தவுடன் இரவுவரை மனைவி மக்கள்
புடைசூழச் சேற்றினியே முத்தம் இட்டுப்
பலபொருளும் விளைவாக்கி, வயிற்றைக் கட்டிப்
பாருக்கே உணவுதரும் உழவன் வாழ்வில்
நலன்கடுகும் மலர்ந்துளதா? மகிழ்ச்சி உண்டா?
நல்லாடை அணிகலன்கள் திருநாள் உண்டா?
சிலநாளில் எரிமலைபோல் வெடிப்பான்! அன்று
சீர்மிகுந்த அவன்தாளை வணங்கும் ஞாலம்!
தொழிலாளர்
செங்கதிரோன் எழுமுன்னே எழுந்தி ருந்து
சிலைபோலே மனைவிமக்கள் நினைவை விட்டே
தங்களுடல் வினாக்குறிபோல் வளைந்து தோன்ற
தம்வயிற்றுக் கரைக்கஞ்சி குடித்துக் கொண்டே
செங்குருதி வியர்வையொரு ஆறாய் ஓடச்
சிந்தைக்குள் வஞ்சனையே சிறிதும் இன்றி
எங்கெங்கும் வளம்பெருக உழைக்கும் தோழர்
இல்லத்தில் காண்பதென்ன? ஒன்றும் இல்லை!
1 Comment