இறையரசன் கவிதை : விடியல்
தமிழ்மொழியில் பிறமொழிச்சொல் களைய வேண்டும்!
தனித்தமிழே தமிழ்நாட்டில் தழைக்க வேண்டும்!
தமிழ்மொழியின் உயர்வொன்றே தம்மின்
தனிவாழ்வின் வித்தென்று புரிய வேண்டும்!
தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பணிகள் ஆற்றும்
தமிழ்மகனே தமிழ்மாந்தன்! இந்தி வந்தால்
தமிழ்கெடுமோ? என்பவனோர் சோற்று முண்டம்!
தமிழுக்கு வரும்விடியல் இனத்திற் காகும்!
உழைப்பதற்குத் தயங்காமல் கையு யர்த்தல்
உயர்வுக்கு முதல்விடியல்! பெருமை யெல்லாம்
தழைப்பதற்கு நற்குணமே விடியல்! என்றும்
தன்னலத்தை மறந்துழைத்தல் பொதுமை இங்கே
முளைப்பதற்கு நல்விடியல்! கல்வி ஒன்றே
முகிழ்க்கின்ற பேரறிவின் விடியல், நமை
விளைப்பதற்கு நல்லெண்ணம் விடியல்! துன்பம்
விலக்குதற்குத் துணிவொன்றே விடிய லாகும்.
1 Comment