இறையரசன் கவிதை : பொறுமை
வறுமையெனும் தேள்கொட்ட நோயும் தாக்க
வாழ்வதற்கே வழியில்லா ஏழையர்க்கும்
பொறுமை யெனும் தன்துணையும் இல்லா விட்டால்
போய்விடுமே அவர்உயிரும் ஓர்நொ டிக்குள்!
சிறுமதியே படைத்தோர்கள் செய்யும் கீழ்மை
சீரார்ந்த நற்சான்றோர் பொறுமை இன்றேல்
மறுகணமே அவர்உயிர்க்கு வேலாய் மாறும்!
மாண்புடையோர் பொறுமையினால் உலகே வாழும்.
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலத்தாய் போலே
அறியாமல் இகழ்வாரைப் பொறுப்பீர் என்று
புகழ்வாய்ந்த வள்ளுவனார் புகன்ற வாய்மை
பொய்யாகிப் போவதுண்டோ ? பொறுமை தன்னை
மிகவாகப் பெற்றவர்கள் தமது வாழ்வில்
மேன்மையுறல் நாம்கண்டோம்! அறிவில் ஆன்ற
தகவுடையோர் பொறுமையின்றேல், மாந்த வாழ்வு.
தடுமாறிக் கெட்டழிதல் திண்ணம் அன்றோ?
(வேறு)
பொறுமையே உலகில் என்றும்
பொன்றிடாப் புகழைச் சேர்க்கும்!
பொறுமையில் மாந்தன் வாழ்வில்
புகலவோர் நலனும் காணான்;
பொறுமையால் வெற்றி கண்டோர்
புவியினில் நிறைய உண்டே!
பொறுமையில் மாந்தர் வாழ்வு
பொருளிலா நூல்போல் வீணே!
30-12-72
1 Comment